சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கள் புரட்சி பயணத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடவா போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட, அவரது படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி வைக்கின்றனர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக தனித்து நின்று தான் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 80 சதவீத இளைஞர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மகத்தான வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் நிறைய கட்சிகள் காணாமல் போகும்.
தொடர்ந்து வாழப்பாடியில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் எந்த தேசிய கட்சியுடனும் அ.ம.மு.க. கூட்டணி இல்லை. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எப்படி எங்களது கவனம் உள்ளதோ? அதே போல தான் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்களது கவனம் இருக்கும். 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க பார்க்கிறார்கள் என்றார்.