குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்தியுள்ளார்.
கடல் இருக்கும் வரை, உலகம் இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக, தற்போது எதற்காக கூட்டணி அமைத்துள்ளது?. அ.தி.மு.க ஆட்சியில் 22 துறைகளில், ரூ.70ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், இப்போது எப்படி ஊழலை ஏற்றுக் கொண்டார்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுவித்தால் மட்டுமே கூட்டணி என்று பா.ஜனதாவிடம் தற்போது ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மது ஒழிப்பு போராட்டம் செய்த அன்புமணி, தற்போது படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?
இனியும் ராமதாசையும், அன்புமணியையும் வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பா.ம.க தோற்கும்.
அன்புமணி எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார். இனி வன்னியர்கள் பெயரைச்சொல்லி ராமதாசும், அன்புமணியும் வாக்கு சேகரிக்கக்கூடாது .
இவ்வாறு அவர் கூறினார்.