தஞ்சாவூர்:

தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அடம் பிடித்தால் சாக்லேட்டை கொடுத்து அன்பாக பேசி அழைத்து செல்வார்.

ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை, கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். குழந்தைகளும் டிரைவர் ‘‘கதிர் அங்கிள்’’ என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாக பழகிவந்தனர்.

இந்தநிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 19-ந் தேதி உடல்நிலை மோசமான நிலையில் திடீரென இறந்துவிட்டார். அவரின் இறுதி காரியத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது கதிர்வேல் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கூட செல்லாமல் பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு ‘‘டிரைவர் அங்கிள்… நாங்க எல்லோரும் வந்திருக்கோம். கண் திறந்து பாருங்க’’ என கதறியது மனதை உருக்குவதாக இருந்தது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தபடியிருந்த அவரின் உடலை பார்த்து எங்களை இனிமேல் நீங்க ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துபோக வரமாட்டிங்களா என கேட்டதும் கதிர்வேலின் குடும்பம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டனர். எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்து கிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்வி குறியாக இருக்கு என்று அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.

தங்களை பாதுகாப்பாக பாசத்துடன் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here