விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் டாக்டர் காமராஜ். இன்று காலை இவர் சேலத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டி வந்தார். அவருடன் உதவியாளர் நாசர் மற்றும் உறவினர் ஒருவரும் காரில் பயணம் செய்தனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே மின்னாம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது.
இதனால் காமராஜ்-யின் கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர் காமராஜ் எம்.பி. கை-கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று டாக்டர் காமராஜ் எம்.பி.யை மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பினார்.
அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். காமராஜ் எம்.பி.யுடன் வந்த மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காமராஜ் எம்.பி. எப்போது காரில் சென்றாலும் சீட் பெல்ட் அணிந்து செல்வது வழக்கம். இன்றும் அவர் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்டினார். இதனால் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.