திருவண்ணாமலை. அக்.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.10.2021 அன்று நடைபெறும் 5-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திட அனைத்து துறையின் ஒருங்கிணைப்புடன் 12.09.2021-ஆம் தேதி அன்று முதல் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம்களில் 215 பொறுப்பு அலுவலர்கள், 32 கண்காணிப்பாளர்கள், 5 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக முதல் வாரம் (12.09.2021) அன்று மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1004 கோவிட்; தடுப்பூசி முகாம்களில் 1,04,325 நபர்களும், 2-வது வாரம் (19.09.2021) அன்று நடைபெற்ற 1004 கோவிட் தடுப்பூசி முகாமில் 77,085 நபர்களும், 3வது வாரம் (26.09.2021) அன்று நடைபெற்ற 1017 கோவிட் தடுப்பூசி முகாமில் 75,896 நபர்களும், 4-வது வாரம் (03.10.2021) அன்று நடைபெற்ற 1017 முகாம்களில் 57,225 நபர்களும், நமது மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, (10.10.2021) அன்று நடைபெற இருக்கும் 1075 முகாம்களில் 92,000 தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இது வரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கோவிட் – 19 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.