கும்பகோணம், செப். 01 –

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,  உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில், காவிரியின் பகவத் படித்துறையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு, காவிரியாற்றில் சிவாச்சாரியார் அஸ்திரதேவரை சுமந்தபடி இறங்கி, மும்முறை நீரில் மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக இவ்விழா,  உச்சிப்பிள்ளையார் கோயிலில், 10 நாட்களுக்கு இது சிறப்பாக கொண்டாடப்படும் இதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலிப்பார், அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது, நிறைவாக, 10ம் நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, உற்சவர் உச்சிப்பிள்ளையார், விசேஷ அலங்காரத்தில், மூஷிக வாகனத்தில், முக்கிய வீதிகள் வழியாக, நாதஸ்வர மேள தாளம் முழங்க, காவிரியாற்றின் பகவத்படித்துறைக்கு எழுந்தருள, அங்கு விநாயகப்பெருமானின் அஸ்திர தேவருக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் சந்தனம் முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்ட பிறகு, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபித்தபடி, அஸ்திர தேவரை சுமந்தபடி, காவிரியாற்றில் இறங்கி, மும்முறை ஆற்று நீரில் அஸ்திரதேவருடன் முழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி சிறப்பாக நடந்தேறியது.

பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டு மீண்டும் அஸ்திரதேவருடன் உற்சவ விநாயகப்பெருமான், முக்கிய வீதிகள் வழியாக உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு புறப்பட்டார் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here