கும்பகோணம், ஆக. 26 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

டெல்லியில் நடைப்பெறவுள்ள ஜி 20 மாநாட்டு அரங்கின் அருகே பிரமாண்டமாக நடராஜர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சிலை என்பது  சுவாமிமலையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பொருட்களின் கலவையில் வெண்கல சிலை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சிலையின் 8 மூலப்பொருட்களாக தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்டவற்றின் கலவையுடன் மிக நுட்ப கலையம்சத்துடன் அச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 19 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை மொத்தம் 28 அடி உயரம் கொண்டது. மேலும் இச் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது.

நடராஜர் நடனம் ஆடுவதை குறிக்கும் தமிழ் கலாசாரம் நிறைந்த இச் சிலையை ஜி20 மாநாட்டில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம் எனக் கூறப்படுகிறது.

மேலும் அச்சிலை சோழர் கால நடராஜர் சிலை போல் வெண்கலத்தில் கலைநயமிக்க தமிழ்நாட்டு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

இச்சிலையை சுவாமிமலையை சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் வடிவமைத்துள்ளனர். அதாவது அவரது மகன்களான ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கலை நயத்துடன் அச்சிலையினை வடிவமைத்துள்ளனர்.

மேலும் அவர்களுடன் சிலை வடிவமைப்பு பணியில் சதாசிவம், கவுரிசங்கர், சந்தோஷ் குமார், ராகவன் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். மேலும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக 28 அடி உயர நடராஜர் சிலையை உருவாக்கி உள்ளனர். அதாவது சிலை என்பது 22 அடி உயரத்திலும், பீடம் 6 அடி என 28 அடியில் காட்சியளிக்கும் இச்சிலை சுவாமி மலையிலிருந்து வாகனத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை ஜி20 மாநாடு நடைபெற உள்ள டெல்லியின் பிரகதி மைதானத்தில் இடம்பெற உள்ளது. இதுபற்றி ஸ்ரீகண்டஸ்தபதி தெரிவிக்கையில் ‛‛இன்று நடராஜர் சிலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும்,

மேலும் இச்சிலையானது இன்னும் பாலிஷ் செய்யப்படவில்லை எனவும் மேலும் சிலையின் இறுதிக்கட்ட பணி மற்றும் பாலிஷ் செய்யும் பணி என்பது டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், இச்சிலை என்பது சிதம்பரம் கோனரிராஜபுரம் மற்றும் பிற சோழர் கால நடராஜர் சிலைகளின் மாடல்களை வைத்து வடிவமைத்துள்ளோம் எனவும், இது சோழர் கால நடைமுறையான டைம்-டெஸ்ட் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் அச்சிலை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு செய்யப்பட்டது என்ற விவரங்களை தொடர்ந்து கூறும்போது, முதலில் மெழுகு பயன்படுத்தி மாதிரி சிலையை உருவாக்குவோம். அதன்பிறகு களிமண் பூசப்பட்டு உலர வைத்த பிறகு மெழுகு மூலம் சூடுபடுத்தப்படும். அதன்பிறகு வெண்கலம் பூசப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைத்து கொடுக்க மத்திய காலச்சார துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த 2023 பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஆர்டர் வந்தது. இந்த பணியை முடிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த பணியை எங்களால் முன்கூட்டியே முடித்திருக்க முடியும். ஆனால் மழை பெய்ததால் பணியில் தாமதம் ஏற்பட்டது” எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இன்று சுவாமி மலையில் இருந்துப் புறப்பட்ட நடராஜர் சிலை உளுந்தூர்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கர்நாடகாவை சென்றடைய உள்ளது. அதன் பிறகு ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, கர்னூல், அடிலாபாத், நாக்பூர், சியோனி, சாகர், லலித்பூர், குவாலியர் மற்றும் ஆக்ரா வழியாக டெல்லி சென்றடையும் என தகவல் தெரிவிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here