வாயலூர், ஆக. 28 –
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. அதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன்புயிருந்தே அக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலானவர்களும் மேலும் மகளிர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி, விரதம் இருந்து தீ குழியிறங்கி தங்களது நேர்த்தி கடனை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார்கள்.
மேலும் அத்திருவிழாவினை காண உள்ளூர் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அவ்விழாவினைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது. விழாவினை முன்னிட்டு வானவேடிக்கைகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.























