செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆறாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னை, நவ. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, ஆறாவது நாளாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அரசு உயர் அலுவலர்களுக்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பணிகளை துரிதப்படுப்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப் படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முதலமைச்சரின் அறிவுறுத்தல படி சிகிச்சைகள் வழங்கப் பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஆறாவது நாளாக நேற்று செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை ரேடியல் ரோடு நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ்க்கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.
பின்னர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில் கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தியவாறு அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து ஆய்விற்கு செல்லும் வழியில் கண்டிகையில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் அடையாறு ஆறு துவங்கும் இடம் மற்றும் மண்ணிவாக்கம் அடையாறு ஆற்று பாலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் முடிச்சூர் சி.எஸ்.ஐ. செயிண்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முடிச்சூர் சுங்கசாவடி அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மதனப்புரத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இறுதியாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பிர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ். எஸ்.பாலாஜி, கு.செல்வபெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, போக்குவரத்துத் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் கே.கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.