சென்னை, நவ. 13 –
தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.
அப்பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் சென்று பார்வையிட்டும் அங்கு பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு மழைக்கால நிவராண பொருட்களை வழங்கி நல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் தரமணி தந்தை பெரியார் நகர் மற்றும் சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினார்.