காஞ்சிபுரம், டிச. 30 –

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. என காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு செய்தியாளர்களிடம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

புத்தாண்டு தினத்தன்று அனைத்து கோயில்களும் திறந்து வைக்கப்படும் சாமி தரிசனத்துக்கு தடையில்லை. ஆனால் பக்தர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி  சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக்கொள்கிறோம். திருக்கோவில் சொத்துக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று வருவாய் துறைக்கு ஒத்துப்போகும் சொத்துக்கள் மற்றொன்று ஒத்துப்போகாத சொத்துக்கள் இவற்றில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் வருவாய்த் துறைக்கு ஒத்துப்போகின்றன. ஒரு லட்சம் ஏக்கர் சொத்துக்கள் வருவாய் துறைக்கு ஒத்துப்போகாத வகைகளாக இருக்கின்றன. இவற்றை கணக்கிடுவதற்காக 40 வட்டாட்சியர்கள் 150 சர்வேயர்கள் பணியமர்த்தப்பட்டு சொத்துக்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன எனத்தெரிவித்தார்.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் 5 கோவில்களில் சித்த மருத்துவமனைகள் உள்ளனர். மேலும் தேவைப்படும் கோவில்களில் சித்த மருத்துவமனைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பழமையும் வரலாற்று சிறப்புமிக்க 50 கோயில்கள் பற்றிய பெருமைகளை மூன்று நிமிட குறும்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பழனி, ராமேஸ்வரம், சமயபுரம், குறும்படங்கள் தயாரிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளை சிறப்பாக நடத்த பள்ளி வளர்ச்சி குழு தொடங்கப்பட்டுள்ளது. 551 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவடையவுள்ள  திருக்கோவில்களில் விரைவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள யாத்திரிகர்கள் தங்கும் விடுதி அவசரகோலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் யாத்ரி நிவாஸ் கட்டடத்தை முறையாக கட்டவில்லை இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மீண்டும் சீர்படுத்தி விரைவில் திறக்கப்படும்.

 தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான 250 தெப்பக்குளங்கள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு ஏகாம்பரநாதர் கோயில் முருகர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் சென்று அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜே. குமரகுருபரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் மன்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழகம் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here