கும்பகோணம், நவ. 13 –

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

கும்பகோணம் டூ சென்னை செல்லும் சாலையில் 185 ஆண்டுகள் பழமையான அணைக்கரையிலுள்ள கொள்ளிடம் பாலம் உள்ளது. இது இரண்டு ஆறுகளுக்குள் அணைக்கரை இருப்பதால் இது, தீவுபோல் காட்சியளிக்கும். இப்பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது .

மேலும் அணைக்கரையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவைகள் ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன.

இந்த முதலைகள், அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள் மற்றும் கால்நடைகளை அவ்வப்போது கடித்து இழுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பும் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர். ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் மெயின் சாலைக்கு வந்து விடுவதாகக் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு அணைக்கரை பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் முதலை இருந்தது. அங்கிருந்த பொதுமக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். பாதசாரிகள் அவ்வழியாக யாரும் நடந்து செல்ல வில்லை என்பதால்  உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தப்பித்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here