சென்னை:
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அ.தி.மு.க-தி.மு.க. தலைமையில் இரு அணி உருவாகி உள்ள நிலையில் தினகரன் ஓசையில்லாமல் தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளார்.
வெற்றி வாய்ப்புக்கு இல்லை என்றாலும் கணிசமான ஓட்டுகளை பெறுவதன் மூலம் அ.தி. மு.க.வின் வெற்றியை தடுக்க முடியும் என்று அ.ம.மு.க. எதிர்பார்க்கிறது. அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அ.ம.மு.க. கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுலைமான் சேட்டு தலைமையிலான முஸ்லிம் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி சென்றுள்ளது.
மேலும் சில கட்சிகளும் தினகரன் அணியில் சேர வாய்ப்பு உள்ளது. அக்கட்சி தலைவர்கள் தினகரனுடன் பேசி வருகிறார்கள். அங்கீகரிக்கப்படாத சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
கூட்டணி இறுதி செய்யப்படுவதால் தனித் தனியாக உள்ள கட்சிகள் எல்லாம் ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. சிறிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதை தவிர்த்து பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவே விரும்புகின்றன.
தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வர இருப்பதால் அதற்குள்ளாக கூட்டணியை உறுதி செய்வதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.