சென்னை:

பாராளுமன்றத்தின் தற்போதைய பதவி காலம் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தேர்தலை 7 முதல் 10 கட்டங்களாக நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவும், காங்கிரசும் தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே இரு கட்சிகளின் தலைவர்களும் மாநில வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதமே தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இதுவரை அவர் தமிழ்நாட்டுக்கு 3 தடவை வந்து சென்று விட்டார்.

அடுத்த கட்டமாக வருகிற 6-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்போது அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அந்த மேடையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், தென்மாநிலங்களில் தேர்தல் பிரசார பயணங்களை தொடங்க தயாராகி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்நாட்டுக்கு வர உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும். எனவே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் ராகுல் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் ராகுலின் பயணம் அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு குழுக்கள் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்வதற்காக வருகிற 13-ந்தேதி தமிழகம் வருகிறார். எங்கு அவர் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

அவர் பிரசாரம் செய்யும் இடம் பற்றி கட்சியின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் கலந்து பேசி முடிவு செய்வோம். இன்று மாலை ராகுல் பிரசாரம் செய்யும் இடம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல்காந்தி பங்கேற்கும் முதல் பிரசார கூட்டம் மதுரையில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here