சென்னை:

நடிகர் ராதாரவி தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரியும். ஆகவே முறைப்படி கூட்டணியை அவர்கள் அறிவித்தபோது, பெரிய அதிர்ச்சியோ ஆச்சர்யமோ யாருக்குமே ஏற்படவில்லை. மீதம் இருக்கும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மோடியின் தயவு அ.தி.மு.க.வுக்கு வேண்டும். அதனால் கூட்டணி வைத்துள்ளார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வுடனும் பா.ஜனதாவுடனும் பா.ம.க. கூட்டணி வைத்ததைத்தான் யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்ற வார்த்தை ராமதாசுக்கு சரியாக பொருந்தும். பா.ஜனதாவை கிழிகிழி என்று கிழித்துக் கொண்டே இருந்தார்.

அதேபோல் அ.தி.மு.க. செய்த ஊழல்களை எல்லாம் பட்டியலிட்டு புத்தகமே போட்டார். ஆளுநரிடம் சென்று புகார் கொடுத்தார். அப்பேர்ப்பட்ட ராமதாஸ், இப்படி அ.தி.மு.க.வுடனும் பா.ஜனதாவுடனும் கூட்டு சேருகிறார் என்றதும் மக்களே அவர்களை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இவர்கள் மெகா கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதெப்படி மெகா கூட்டணியாக முடியும்? அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. இணைந்துவிட்டால் அது மெகா கூட்டணியா? மெகா கூட்டணி என்று இதுவரை எவரெல்லாம் சொல்லிவந்தார்களோ, அவர்கள் எல்லோருமே தோற்றுதான் போயிருக்கிறார்கள்.

கமல்ஹாசன் எனக்கு பால்ய நண்பர்தான். இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராமதாஸ், கமலுடன் கூட்டணி வைத்திருக்கலாம். பத்து தொகுதிக்கு மேலேயே ஒதுக்கித்தந்து இருப்பார்.

நல்லவேளை, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால் இருக்கிற கோடிக்கணக்கான கட்சிகளுடன் அந்தக் கட்சியும் ஒன்றாகியிருக்கும்.’

இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here