ராமநாதபுரம்,
நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா கிராத் ஓதினார். கல்லுாரி துணை முதல்வர் ரஜனி கல்லுாரியின் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் சுமையா வரவேற் புரையாற்றினார். மலேசியா மருத்துவ மனையின் சேர்மன் டத்தோ டாக்டர் நுாருல் அமீன் முகம்மது இசாக் தலைமை உரையில் பேசும் போது, முந்தைய காலத்தை ஒப்பிடும் போது தற்போது பெண்கள் நன்கு முன்னேறி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கல்விதான். முன்பெல்லாம் சில சமுதாயத்தில் பெண்களை ஒரு வயதிற்கு மேல் படிக்க வைக்காமல் வீட்டில் இருக்க வைத்தனர். ஆனால் இன்று பெண்கள் கல்வியில் சிறந்து ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளில் சாதித்து வருகின்றனர், என்றார்.
அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தாசிம்பீவி கல்லுாரி 65 மாணவிகளுடன் துவங்கி இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் கல்லுாரியாக உயர்ந்துள்ளது பெருமையான விஷயம். அதைவிட இக்கல்லுாரி சமுதாய சிந்தனையுடன் கிராமிய பணிகளின் தனிகவனம் செலுத்துவதை நான் வெகுவாக பாராட்டுகிறேன். அதிலும் குறிப்பாக கிராம குழந்தைகளை தத்து எடுத்து கல்வி கற்றுத்தருவது மிக சிறப்பாகும். 1947ம் ஆண்டுகளில் 500 கல்லுாரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகள் வந்துவிட்டன. கல்வி என்பது மிக முக்கியம். முன்பெல்லாம் வளர்ச்சி என்பது இல்லாமல் இருந்தது. அதாவது 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் சிறிது மாற்றம் இருந்தது. அதன்பின் 300 ஆண்டுகளுக்கு ஒரு மாற்றம், அதன்பின் 50 ஆண்டுகளுக்கு பின் ஒரு மாற்றம் என வளர்ச்சியை காணமுடிந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. இளைஞர்கள் தங்களை அவ்வப்போது உலக அறிவு குறித்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாக விளங்குகிறது.
இவ்வாறு பேசினார்.
கல்லுாரி செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புகாரி சிறப்பு விருந்தினர் மற்றும் தலைமை விருந்தினர்களை கவுரவித்தார். விழாவில் இளங்கலையில் சிறந்த மாணவிக்கான விருதை உளவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி நிரோஷா அப்துல் மாலிக் என்பவருக்கும், முதுகலையில் கணித துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஆமீனாபீவிக்கும் சிறப்பு விருந்தினர் வழங்கி கவுரவித்தார். மாணவி ஹஸ்மத் தாகிமா நன்றி கூறினார்.