செங்குன்றம், பிப்.07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அரஜாகப் போக்கினைக் கண்டித்து, சி.பி.எம். கட்சியினைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது.செய்தனர்.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய முக்கிய சாலைகளில் ஒன்றான சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையாகும்.
மேலும் சென்னையில் இருந்து மாதவரம், செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திராவிற்கு செல்லும் சாலை இதுவாகும். மாதவரம் முதல் தடா வரையில் மொத்தம் 43 கிமீ தூரமுள்ள அச் சாலையை புணரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக இச்சாலை வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம் இருந்து செங்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு மாதவரம் முதல் தடா வரையில் 6 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு அப்பணி முழுமையாக முடிவடையாமல் இருக்கும் நிலையில், கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக்க் கூறி நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தைக் கண்டித்து சி.பி.எம். கட்சியைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்ட அக்கட்சியைச் சார்ந்த்தொண்டர்கள் மற்றும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் உள்ளிட்ட திரளான வாகன ஓட்டிகள் உள்ளிட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் 6 வழி தேசிய வழிச் சாலை பணி முழுமைப்பெறாத நிலையிலும், மேலும் அப்பகுதியில் உள்ள மேம்பால பணிகள் முழுமை அடையாத நிலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 200 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




















