ராமநாதபுரம்,மார்ச்
டி.டி.வி. தினகரன் கைகாட்டுபவரே பிரதமராவார், என ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் கூறினார்
ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ சார்பில் கூட்டணி கட்சியான அமமுக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருமண மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ தேர்தல் பணிக்குழு தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். முகம்மது இஸ்ஹாக் வரவேற்றார். கூட்டத்தில் அமமுக வேட்பாளர் வ. து. ந. ஆனந்த் பேசியதாவது:
ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த எனது வெற்றி எளிதாக்கப் பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அமமுக வென்று ஒற்றை ஆளுமை டிடிவி தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம். சின்னம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. ஜாதி, மதம், கட்சி ஆகியவற்றை கடந்து பொதுவான வேட்பாளராக அமமுக., வை மக்கள் அங்கீகரித்துள்ளதால், நமது கூட்டணி வெல்வது உறுதி. துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் ராமநாதபுரத்தில் ஏப்., 14 அல்லது 15ல் பிரசாரம் செய்கிறார். 1972 முதல் என் தந்தை (தமிழக தொழிலாளர் நலத் துறை முன்னாள் அமைச்சர் வ .து. நடராஜன்) அதிமுக., வில் பணியாற்றினார். அதிமுக., நிர்வாகிகள் தவிர தொண்டர்கள் அனைவரும் அமமுக., விற்கு வாக்களிப்பர். எந்த சின்னம் கிடைத்தாலும் 10 நிமிடத்தில் வீடு, வீடாக சென்று மக்களிடம் கொண்டு சேர்த்து 2 .50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. தினகரன் கை காட்டுபவரே பிரதமராவார். என்னை வெற்றி பெற வைத்தால், சென்னை – ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்கவும், வட மாநில தொலை தூர ரயில்கள் ராமநாதபுரத்தில் நின்று செல்லவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இந்திய, இலங்கை நாடுகளின் சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொந்தரவின்றி மீன்பிடி தொழில் செய்ய நிரந்தர நடவடிக்கை எடுப்பேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் கடந்த காலங்களைப் போல் தேர்தல் வாக்குறுதியாக இருக்காது. நிரந்தர தீர்வு காண நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்லும் தமிழக படகுகளுக்கு இலங்கை அரசு விதிக்கும் அபராதத்தை குறைக்க இந்திய வெளியுறவுத் துறையிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் அப்துல் வஹாப், பைரோஸ்கான், மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் ரபிக் அகம்மது, அமமக நிர்வாகிகள் முனியசாமி, ஸ்டாலின் ஜெயசந்திரன், மாநில மகளிரணி கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். அஜ்மல் சரீப் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here