ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் இது வரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்… இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி என மிகவும் மனம் உருகி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி பேசினார்
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் நவாஸ்கனி ராமநாதபுரத்தில் அண்ணா சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், நகர் செயலாளர் கார்மேகம், இளைஞரணி செயலாளர் இன்பா ரகு, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து முதற்கட்ட பிரச்சாரத்தை துவக்கினார்.
அதன் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தொகுதிக்கு சொந்தக்காரன். எனவே இந்த மண்ணின் மக்கள் பிரச்னையை நான் நன்கு அறிந்தவன் அந்த வகையில் மக்கள் பிரச்சனையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து முயற்சியையும் எடுப்பேன். நான் ஏற்கனவே வெளியூர், வெளிநாடு சென்று கடும் உழைப்பால் தேவையான பொருளாதாரத்தை சேர்த்தது மட்டுமின்றி தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் துவங்கி சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளேன். இது மட்டுமின்றி நான் இதுவரை கல்விக்காக என்னை மட்டுமல்ல நான் சார்ந்த கட்சி, எனது மாவட்டம், வேற்று கட்சி, வேற்று மாவட்டம் என யார் தேடி வந்தாலும் கல்விக்கு தேவையான உதவிகளை பலருக்கு செய்துள்ளேன்.இதை தற்போது கூறுவதற்கு பெருமை என்பதற்காக அல்ல நான் கட்சிக்கு வந்து ஒரு எம்பி என பொறுப்பு ஏற்று பணம் சம்பாதிக்க அல்ல சேவை செய்யவே என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. நான் மக்கள் பணியாற்றவே வந்துள்ளேன். ராமநாதபுரம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நான் லோக்சபாவில் குரல் கொடுப்பேன். குறிப்பாக மீனவர் பிரச்னை, மீட்டர் கேஜாக இருந்த போது ஓடிய ரயில்கள் தற்போது ஒடாமல் நின்று விட்டதை மீண்டும் இயக்க, அது மட்டுமல்ல நான் வசிக்கும் சாயல்குடி பகுதியிலும் ரயில் இயக்க கிழக்கு கடற்கரை ரயில் சேவையை துவங்க வலியுறுத்துவேன். இதுவரை பாஜக அரசு மக்களுக்கு தேவையான எதையும் செய்ய வில்லை. மத்தியில் பாஜக அரசு மாறினால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். நான் வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வருவேன். நான் ஏற்கனவே தொழில் செய்து பலருக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்தாலும் தற்போது வெற்றி பெற்ற பின் மத்திய அரசு மூலம் வலியுறுத்தி பல தொழிற்சாலைகளை உருவாக்கி ராமநாதபுரம் தொகுதியில் வேலை வாய்ப்பை பெருக்குவேன். தொழிற்பூங்கா அமைத்துடுவேன். கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண்பேன். இதுமட்டுமல்ல தமிழகத்தில் இதுவரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்… இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி. மக்கள் நலன்தான் என் நலன். நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்க அல்ல மக்கள் சேவையாற்றவே…!
இவ்வாறு அவர் கூறினார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் நாடாளு மன்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் வாக்குறுதி...