இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச்
திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 தினங்களும் உற்சவ மூர்த்திகளுக்கு கோயில் ஸ்தானிக பட்டாச் சாரியார்களால் விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப் பாராயணம் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க 46 அடி உயரமுள்ள பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர். ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப் பெருமாள் உற்சவ மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் பட்டாச் சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடினர். நிறைவாக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு ஆதிஜெகநாதப் பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் உற்ஸவ மூர்த்திகளாய் கருட, ஆஞ்சனேய வாகனத்தில் எழுந்தருளி சேதுக்கரைக்கு சென்று தீர்த்தவாரி பூஜையில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
படவிளக்கம்:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.(<உள்படம்) ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப் பெருமாள்.