ராமநாதபுரம், மே 16-
ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பக்தர்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடந்தது. இக்கோயில் அருகே உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி காலை 6.15 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், த்தாத்ரேயர் ஹோமம், காயத்ரி மாதா ஹோமம், சுதர்ஷன ஹோமம் நடந்தது. மாலையில் யாகசாலை பிரவேசமும் அதனை தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது. இரவு யந்திர ஸ்தபானமும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி விக்ரஹ பிரதிஸ்டை, அஸ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா 16ம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும் ஆலயத்தை வலம் வந்து மங்கள முனீஸ்வர குருக்கள் தலைமையில் வேதவிர்பன்னர்கள் வேதங்கள் முழங்க வானத்தில் கருட பகவான் கோபுரத்திற்கு நேராகவும் தாழ்வாகவும் வட்டமிட கோபுர கலசத்தில் குருக்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர். நுாற்றுகணக்கான பக்தர்கள் மத்தியில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடந்தது. பக்தர்களுக்கு கும்பநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா சன்மார்க்க டிரஸ்ட் அறங்காவலர் அதிவீரபாண்டியன் தலைமையில் சிவஞானமூர்த்தி, முத்துக்குமார், எம்.எஸ்.ராஜா, மகேந்திரன் உள்ளிட்ட கமிட்டியினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.