சென்னை:

துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார்.

சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல் கொலை செய்யும் நாள் வரை குறையவே இல்லை. என் மீதுகொண்ட அளவு கடந்த காதலால் என்னை எந்த சூழ்நிலையிலும் மறக்க கூடாது என்று உடலில் 3 இடங்களில் பச்சை குத்திக்கொண்டார்.

முக்கியமாக அவர் வலது நெஞ்சில் என் பெயரை குத்திக் கொண்ட போது வலியால் துடித்தார். அதை பார்த்து நானே அழுது விட்டேன். ஆனால் அவர் பிடிவாதமாக குத்திக் கொண்டார். எங்களுக்கு சிவனை மிகவும் பிடிக்கும். தினமும் வணங்குவோம். அதனால் சிவன் பார்வதியை வலது கையில் பச்சை குத்திக்கொண்டார். சிவன் பார்வதி போல நாங்கள் வாழ வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம்.

நான் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். சினிமா வாய்ப்பு இல்லாததால் பிரியாணி கடை வைத்தேன். அதன் பின்னர் தான் டைரக்டர் ஆனேன். என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த புதுமுகங்களுக்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தேன். சமீபத்தில் தான் என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சந்தியாவின் உடலை துண்டித்தபோது பாலகிருஷ்ணன் முதலில் வலது கையை தான் துண்டித்துள்ளார். தன்னை காதலிப்பதற்காக பச்சை குத்திக்கொண்ட வலது கையை முதலில் துண்டிக்க காரணம் சந்தியா செய்த துரோகத்தால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்புதான் என்கிறார்கள்.

இதற்கிடையே சந்தியாவின் தலையையும் இடது கையோடு கூடிய உடல்பாகங்களை தேடும் பணியில் 20 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு பகலாய் தேடி வருகிறார்கள். பெருங்குடி குப்பை கிடங்கை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்திலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.

பெருங்குடியில் 20 அடி உயர குப்பையில் 15 அடி வரை தோண்டி தேடிவிட்டார்கள். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் டைசன் நாய்க்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து இதற்காக பெங்களூருவில் இருந்து இன்னொரு மோப்ப நாய் வரவைக்கப்பட உள்ளது.

துணை நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஞாலம் பகுதியில் வசித்து வருகிறார்கள். மகள் சாவு குறித்து பிரசன்னகுமாரி கூறியதாவது:-

கொடூரமான முறையில் எனது மகள் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்னி, இதயம், கண் போன்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை. அவரது உடல் உறுப்புகள் திருடி விற்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த கொலையில் பாலகிருஷ்ணனுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனது மகள் சாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

இவ்வாறு பிரசன்னகுமாரி கண்ணீர் மல்க கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here