வேளச்சேரி, மார்ச். 25 –
சென்னை வேளச்சேரியில் கடந்த 8 ஆம் தேதி சீனிவசான் என்ற முதியவர் வீட்டில் அவர் இரவில் தூங்கிக் கொண்டுயிருக்கும் போது வீடு புகுந்து 86 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து முத்துக்கிருஷ்ணன் என்ற கொள்ளையன் தலைமறைவானர்.
இந்நிலையில் கொள்ளையனை பல இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கொள்ளையன் கோவையில் இருப்பதாக வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று வேளச்சேரி காவல்நிலைய தனிப்படை போலீசார் கோவையில் அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். 70 -வயதான இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் தன் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த 86 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்..
சீனிவாசன் இக்கொள்ளைக் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையடித்த நபர் முத்துகிருஷ்ணன் (30) என்பதும் இவர் பழைய குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு 15 நாட்களாக தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோயம்பத்தூரில் பதுங்கியிருந்த முத்துகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து 52 சவரன் தங்க நகை மற்றும் 4.5 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னை வேளச்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து முத்துகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



















