மயிலாடுதுறை,பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான்  ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். அத்திருக்கோயில் காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் இக்கோவில் முதன்மையான தலமாக விளங்குவதாக அத்திருத்தல வரலாறு கூறுகிறது.

மேலும் அத்திருக்கோவிலில் உள்ள முக்குலங்களில் நீராடி ருத்ர பாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என்பதால் அக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அச்சிறப்புமிகு அக்கோயிலில் கடந்த 21ம் தேதி  இந்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ஆம் நாள்  முக்கிய நிகழ்வாக  திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது, மணமேடை முன்பாக வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க சிறப்பு யாகம் செய்யப்பட்டு திருக்கல்யாண சடங்குகள்  தொடங்கியது. பின்னர் திருமாங்கல்யம் அணிவித்து சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

அச்சிறப்பு வாய்ந்த அந் நிகழ்வினைக் காண வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிதரிசனம் செய்தனர்.

பின்னர் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மன் இணைந்தவாறு வீதி உலா நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here