திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முத்து விநாயகர் கோவில் தெருவில் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், தி.மலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஆகியோர் முன்னிலை வகிக்க, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பா.கார்த்திக்வேல்மாறன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்டு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து 250க்கும் மேற்பட்ட மகளிருக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், கேரம்போர்டு, கைப்பந்து கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துகளை 50க்கும் மேற்பட்ட குழுக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பிற்கு எங்களுடைய உழைப்பு ஈடாகாது ஆனாலும் கூட சிறுதுரும்பும் பல்குத்த உதவும் எனும் கிராமத்து பழமொழிக்கேற்ப நானும் எனது துறைமூலம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அதோடு மட்டுமல்ல அவர் முதல்வரானவுடன் நான் வைத்த முதல் கோரிக்கை காவிரி கூட்டு குடிநிர் திட்டத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதுதான் திருவண்ணாமலை ஆன்மீகநகரம் இங்கு கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. ஆன்மீக பெருமக்கள் அதிகம் வருகை தருகிற நகரமாக உள்ளது. இங்கு புதிய பேருந்துநிலையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் பேருந்து நிலையம் அமையும் என்று அம்மையார் அறிவித்தார்கள் ஆனால் பேருந்துநிலையம் வரவில்லை. அறிவிப்போடு நின்றுவிட்டது. எனவே புதிய பேருந்துநிலையம் திருவண்ணாமலை பைபாஸ் சாலை (ரிங்ரோடு) அருகில் அமைந்திட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பேசியிருக்கிறேன். மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு நடைபெறுகிற ஆட்சிதான் திமுக ஆட்சி. அதனால்தான் கோட்டையில் முதல்வரை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிகிறார்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாளைக்குள் என்கிற அடிப்படையில் மனுக்களெல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பயன்கள எல்லாம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை நானே நேரில் வழங்க இருக்கிறேன். நகராட்சி கடைகளுக்கு அதிகவாடகை விதிக்கப்பட்டிருப்பதாக வாடகைதாரர்கள் அளித்த மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழாவில் வடக்கு மாவட்ட பொருப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, ஒ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் சி.சுந்தரபாண்டியன், பாரதி ராமஜெயம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இல.குணசேகரன் நன்றி கூறினார்.