திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி கிராமத்தில் நிவர் புயல் காரணமாக சகோதரர்கள் முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வசித்து வந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததை முன்னிட்டு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகளை மேல்ராவந்தவாடி கிராமத்திரற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன், கல்யாணி, தம்பதியனர் தங்களது சொந்த நிலத்தில் முருதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகிய இரண்டு மகன்கள் குடும்பத்தினர் மற்றும் கண்ணன் தாயார் சின்னதாய் ஆகியோருடன் கூரை மற்றும் ஒட்டு வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக இவர்கள் வசித்து வந்த இரண்டு வீடுகளும் பயன்படுத்த முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இவர்கள் குடும்பத்தினர் மற்றும் மேல்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த மேலும் இரண்டு குடும்பத்தினர் அருகில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்து தரப் பட்டுள்ளது.
கண்ணன், முருதாஸ் தினக்கூலி வேலை செய்தும், கண்ணதாசன் துப்பரவு பணி செய்தும் தங்கள் குடும்பங்களை மிகுந்த சிரமப்பட்டு காப்பாற்றி வருகிறார்கள். முருதாஸின் மனைவி பெயர் மாலதி மற்றும் 10-ம் வகுப்பு படித்துள்ள மகன் அபினேஷ், 8-ம் வகுப்பு படித்து வரும் மகள் அக்ஷயா, 6-ம் வகுப்பு படித்து வரும் மகன் அன்புச்செல்வன் ஆகிய மூன்று குழந்தைகளும், கண்ணதாசனின் மனைவி பெயர் அலமேலு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மகள் செந்தமிழ், 5-ம் வகுப்பு படிக்கும் மகள் இனிய ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
முருதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினர் தங்களது பெற்றோருடன் ஏழ்மையான நிலையில் குடும்பத்தை வழிநடத்தி வந்துள்ளதால், நிவர் புயல் காரணமாக தங்களது வீடுகள் பயன்படுத்த முடியாமல் முற்றிலும் சேதமடைந்ததை சீரமைக்க பணம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து மேல்ராவந்தவாடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் கடந்த 8 மாதங்களாக தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கள் குடும்பத்தினருக்கு அரசு மூலம் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கு தினசரி நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட குடும்பத்தினரின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மேல்ராவந்தவாடி கிராமத்திற்கு நேரில் சென்று முருதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகள் வழங்கினார். மேலும், அரசு சார்பில் இரண்டு மாதங்களுக்குள் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என முருதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தங்களது குடும்பத்தின் ஏழ்மையான நிலை அறிந்து அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான ஆணை நேரில் வழங்கியதற்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மேல்ராவந்தவாடி கிராமத்தை சோந்த முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.