திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் படிக்கும் மற்றும் படித்துள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக வருகிற 11ந் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்கிறோம். நேர்காணல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. படித்த தகுதி வய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதுதான் தமிழக அரசின் நோக்கம் என்றார். ஆய்வின்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், மண்டல இணை இயக்குநர் ஆ.அனிதா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி, வேளாண் இணை இயக்குநர் முருகன், கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் எஸ்.சுரேஷ், டாக்டர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.