புதுடெல்லி:

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய மீன்பிடி கப்பலை கடத்தி, அதன் மூலம் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்தனர்.

26-11-2008 அன்று மும்பை நகரில் அந்த பயங்கரவாதிகள் 12 இடங்களில் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தொடர் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்தோ-பசிபிக் பிராந்திய உயர்மட்ட கருத்தரங்கில் பேசிய கடற்படை தளபதி சுனில் லான்பா, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

’உலகம் முழுவதும் பயங்கரவாத குழுக்கள் அதிவேகமாக தலையெடுத்து வருகின்றன. இந்த தீமை எதிர்காலத்தில் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சிலநாடுகள் நீங்கலாக பல்வேறு நாடுகளில் பலவகைகளில் பயங்கரவாதம் சமீபகாலமாக அதிகரித்து வருவதை உலகம் பார்த்து வருகிறது.

சமீபத்தில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவை நிலையகுலைய வைக்கும் நமது அண்டை நாட்டின் பங்களிப்பு இருந்தது ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி, பிறநாட்டு அரசால் ஏவப்படும் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

பயங்கரவாதிகள் கடைபிடிக்கும் தாக்குதல் முறைகளில் ஒன்றாக கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக நமக்கு நம்பகமான உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளன’ எனவும் சுனில் லான்பா சுட்டிக்காட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here