காஞ்சிபுரம், டிச. 16 –
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்தில் இட பற்றாக்குறையால் 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகட்டி ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 53 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள நூலகம் கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2009-ல் இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் 1500 வாசகர்கள் பதிவு செய்துள்ளனர். 52 புரவலர்கள் உள்ளனர். தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் படிக்க வருகின்றனர். இல்லத்தரசிகளும் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பொது அறிவு புத்தகம், இலக்கியம், நாவல், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், கவிதை, போட்டித் தேர்வு, சுற்றுலா, ஆன்மிகம், சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன.
கிளை நூலகமாக இருந்தாலும் வாசகர்களின் வருகை அதிகம் என்பதால் முழுநேரமாகவே இயங்குகிறது. இந்த நூலகக் கட்டிடத்தில் மழைக் காலங்களில் நீர் கசிந்து நூலகத்தின் உள்ளே இருக்கும் அரிய வகை புத்தகங்கள் பாழாகின்றன. கரையான்களால் பல புத்தகங்கள் அழிந்துள்ளன.
மேலும், இங்கு புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய அளவு அலமாரிகள் இல்லை. எனவே 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு, நூலகத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், கல்லூரி சம்பந்தமான புத்தகங்களை மாணவர்கள் படிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் நூலகத்தில் அமர்ந்து படிக்கக் கூடிய இருக்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றன.
இதனால் வாசகர்கள் அமர்ந்து கூட படிக்க வழியில்லாமல் நூலகத்தின் வெளியேயும், படிக்கட்டில் அமர்ந்தும் படிக்கின்றனர். நூலகத்துக்குரிய அம்சங்கள் எதுவுமே இல்லாமல் பெயரளவுக்கு செயல்பட்டு வரும் இந்த நூலகத்தை சீர்படுத்தி, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என வாசகர்கள், குறிப்பாக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு இல்லாத ஊர் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரும் பாழானதே. ஆலயம் இல்லாத ஊரில் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரிலும் குடியிருக்க கூடாது என வாய்மொழி சொல் உள்ளது பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நூலகத்தின் அவல நிலை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்து இருக்கிறார்கள். வாசகர்களோ புதிய கட்டடம் கட்டித்தர ஓங்கி குரல் எழுப்பி வருகின்றனர் .. உரியவர்களின் செவி சேர்ந்து சிறப்பு ஏற்படுமா என்ற வினாவோடு ..காத்திருப்பில் வாசகர்கள் ..