புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை (கிராஜுவிட்டி) உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த சம்பள கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பணிக்கொடை(கிராஜுவிட்டி) தொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வருவதால் பொதுத்துறை பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.