சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது.
மதுக்கடையை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார்.
மதுக்கடை திறக்கப்படும் நேரத்தையும் குறைத்தார். அவர் மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடினார். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளும் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டது.
இப்போது 4165 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடை இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
மதுவுக்கு பலர் அடிமையாகி வருவதால் மதுக்கடை எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோர்ட்டு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறது.
மதுக்கடை குறைந்தாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மதுக்கடையில் காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன? என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மதுக்கடைகளை பகல் 12 மணிக்கு பதில் மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து டாஸ்டாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது அரசின் முடிவாகும். இதை தேர்தலுக்கு பிறகு செயல்படுத்துவதா? அல்லது அதற்கு முன்பே செயல்படுத்தலாமா? என்பதை அரசு தான் முடிவு செய்து அறிவிக்கும் என்றனர்.