புழல், ஜூன். 13 –
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு என்றும் ஒவ்வொரு குழந்தைகளும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளவே எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி என்பது வெறும் கல்வி மட்டுமல்ல வாழ்க்கையின் வழிகாட்டி என்றும் 2025 க்குள் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடிப்படை எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், தொடக்கக் கல்வி என்பது வெறும் கல்வியை மட்டும் அல்ல வாழ்க்கையின் வழிகாட்டியாகும்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும் அறிவு தாகத்தை தீர்க்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் சிதையாமல் காக்க வேண்டியது அனைவரின் கடமையாகும் எனவும்,
கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கற்றல் கற்பித்தல் உபகரணங்களையும் ஆசிரியர் கையேடுகள் மற்றும் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு, திரும்புகிற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்.பின்னர் அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.




















