கும்பகோணம், மார்ச். 22 –
கோரா பட்டு விலையினை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ள கோரா பட்டு விலையினை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கச்சாப்பட்டு பதுக்கலை தடுத்திடவும், கோரா பட்டு தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து விலையினை கட்டுப்படுத்திடவும், பட்டு கொள்முதல் கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்திடவும், விலையேற்றத்திற்கு தகுந்தாற் போல் கச்சாப்பட்டிற்கு மானியம் வழங்கிடவும், கைத்தறி பட்டிற்கு முழுமையாக ஜிஎஸ்டி வரிவிலக்கு அளித்திட கோரியும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள், தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளடக்கிய, கும்பகோணம் பட்டு நெசவு தொழில் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் மாலை வரையிலான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வுண்ணாவிரத போராட்டம் எஸ் ஜெ சுப்பிரமணியன் தலைமையில் நடந்து வருகிறது. இதனை கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ராயா கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், பட்டு கைத்தறி நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.





















