சென்னை, ஜன. 27 –
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு முதலமைச்சர் பின் வருமாறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்
நாளை முதல் 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.
மேலும் பொது அறிவுரைகளையும் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டள்ளது.
அதில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).
கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
- கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
- நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களிடம் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..























