கும்பகோணம், டிச. 16 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில் இவ்வாண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டாதேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காகம் வாகனம், கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.
மேலும் இவ்வாலயத்தில், உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார் எனவும் அதேபோல் ராமபிராமம் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளதாக அத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் பல்வேறு சிறப்புக்களை கொண்ட இத் ஸ்தலத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டிற்கான விழா வருகின்ற 20 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்ற பிறகு சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாளம் முழங்க கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி மஞ்சள் பொடி திரவிய பொடி பால் தயிர் சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் காகம் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு சுவாமிகளுக்கும் கொடி மரத்திற்கும் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் லட்சார்ச்சனை, நிகழ்ச்சியான 20ம் தேதி சனிப்பெயர்ச்சி அன்று மங்கள சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஹோமம், அதனைத் தொடர்ந்து கடன் புறப்பாடு தீபாராதனையும், 21 ஆம் தேதி மங்கள சனீஸ்வரன் பகவானுக்கு திருக்கல்யாணம், இரவு திருவிதியுலா, 23 ஆம் தேதி கொடியிருக்கத்துடன், நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், ஆலய அர்ச்சகர் ஞானசேகரன், சிறப்பாக செய்து வருகின்றனர்.




















