பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார்.

பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது வீரர் இடத்தை பாபர் ஆசம் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக முதல் 5 சதங்கள் அடித்தவர் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்தார். மேலும் 20 ஓவர் போட்டியிலும் வேகமாக 1000 ரன்னை அவர் எட்டினார்.

பாபர் ஆசம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் அணி சரியாக ஆடாவிட்டாலும் அவர் மட்டும் திறமையை வெளிப்படுத்தினார். ஒருநாள் போட்டியில் 226 ரன்களும், டெஸ்டில் 216 ரன்களும் எடுத்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும்போது, “பாபர் ஆசம் சிறந்த ஆட்டக்காரர். உலகில் மிக சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம் பெறுவார். தற்போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் ஆசமை விராட் கோலியுடன் ஒப்பிட்டது சரிதான்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பலரும் சமூக வலைதளத்தில் விராட் கோலியுடன், பாபர் ஆசமை ஒப்பிட்டு கருத்துக்களை அதிகளவில் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று பாபர் ஆசம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்டில் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஆனால் நான் தற்போதுதான் என்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறேன். நான் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது. இதனால் என்னை யாரும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here