ராமநாதபுரம், மே 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து களரி திருவிழா நடத்தி ஒற்றுமைக்கு எடுதத்துக்காட்டாக திகழ்வது மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அருகே ஜமீன்தார் வலசை, இந்தைகூட்டம், இலந்தைகூட்டம் கோகுல்நகர், தமிழர் தெரு, சமத்துவபுரம், அம்மாரி, குலசேகரகால், கோகுலவாடி, பழனிவலசை, பூசாரிநகர், நேதாஜிநகர், முடிவீரன்பட்டிணம், மற்றொரு இலந்தைகூட்டம், பசும்பொன்நகர், சித்தார்கோட்டை நாடார்வலசை ஆகிய 15 கிராமங்களில் பல்வேறு ஜாதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 15 கிராமத்தில் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் அனைவரும் ஜாதி வித்தியாசம் இன்றி உறவினர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த 15 கிராமத்திற்கும் பொதுவாக இந்து ஐக்கிய மகாசபை அமைப்பு கடந்த 3 தலைமுறைகளாக உள்ளன. இந்த இந்து ஐக்கிய மகாசபையில் அனைத்து ஜாதியினரும் கலந்து நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் 15 கிராமத்திற்கும் பாதுகாப்பு அரணாகவே செயல்படுகின்றனர். எந்த ஒரு பிரச்னையும் 15 கிராமங்களிலும் வராதவகையில் பாதுகாத்து வருகின்றனர். இதனால் இந்த 15 கிராமங்களில் இதுவரை போலீசார் எவ்வித பிரச்னைக்காகவும் சென்றதே இல்லையாம். சின்ன பிரச்னை வந்தாலும் உடனடியாக இந்து ஐக்கிய மகாசபை தலையிட்டு பேசி தீர்த்துவிடுகின்றனர். இதனால் பிரச்னைகள் பெரிதாவதில்லை. இதுமட்டுமின்றி 15 கிராம மக்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையை போற்றும்விதமாக ஆண்டுதோறும் மாசி களரி திருவிழா நடத்துகின்றனர். இத்திருவிழாவில் அனைத்து ஜாதியினரும் பங்கேற்று சாமி கும்பிட்டு சமபந்தி உணவு சாப்பிட்டு ஆடல்பாடல் என கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஒற்றுமை கிராமங்களின் நிர்வாகம்
ஒற்றுமைக்கு பெயர் சேர்க்கும் வகையில் 15 கிராமங்களை நிர்வகிக்கும் இந்து ஐக்கிய மகாசபையில் தலைவர், நிர்வாகிகள் உள்ளனர். இந்தாண்டுக்கான தலைவராக நாகேந்திரன், உபதலைவராக ரவிசந்திரன், செயலாளராக அன்பரசு, பொருளாளராக ரமேஷ், ஆடிட்டராக முருகானந்தம், தகவல் தொடர்பாளராக நாகநாதன் என அனைத்து ஜாதிகளையும் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் 15 கிராமங்களில் அடிப்படை பிரச்னை, குடும்ப பிரச்னை, ஊர் பிரச்னை என எதுவாக இருந்தாலும் உடனடியாக தலையிட்டு பிரச்னை பெரிதாகவிடாமல் தடுத்து தீர்வு கண்டுவிடுகின்றனர்.
தலைவர் நாகேந்திரன் மற்றும் செயலாளர் அன்பரசு ஆகியோர் கூறியதாவது:
எங்கள் கிராமங்களில் நாங்கள் யாரையும் பெரியவர், சிறியவர் என பார்ப்பதில்லை. கிராமத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என பாகுபாடும் பார்ப்பதில்லை. குறிப்பாக நீ என்ன ஜாதி என யாரும் கேட்பதில்லை. ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறோம். அதற்கு உதாரணம்தான் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து ஜாதியினரும் இருக்கின்றனர். எந்த ஒரு பிரச்னையென்றாலும் உடனடியாக சரிசெய்துவிடுவதால் போலீசார் கூட எங்கள் கிராமங்களுக்கு வருவதே இல்லை. அவர்கள் வருவதற்கு இங்கு ஒன்றும் நடப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களரி திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்வோம், யார் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அதை பெரிதாக இங்கு எடுத்துக்கொள்வதில்லை. என்றனர்.
தமிழர்தெரு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (74) கூறியதாவது:
எனக்கு விபரம் தெரிந்து கடந்த 3 தலைமுறைகளாக எங்கள் 15 கிராமத்திலும் நாங்கள் ஒற்றுமையுடன் இந்து ஐக்கிய மகாசபை அமைத்து வாழ்கிறோம். எங்கள் ஒற்றுமையே எங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத்தருவதால் எங்கள் கிராமங்களில் யாரும் ஜாதி மதம் பார்ப்பதில்லை. நாங்கள் இங்கு பிறந்து வாழ்வதை பெருமையாகவே கருதுகிறோம், என்றார்.
சித்தார்கோட்டை முஸ்லிம் பரிபாலன சபையும் இந்து ஐக்கிய மகா சபையும் இணைந்து இப்பகுதியில் மக்களுக்கு விரோத போக்கு எதுவாயினும் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். முஸ்லிம்களும் இந்துக்களும் இங்கு இணைந்து செயல்படுகின்றனர். இதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதி பெற்று பழனிவலசையில் நடந்த மணல் குவாரியை 15 கிராம மக்கள் மற்றும் சித்தார்கோட்டை முஸ்லிம் பரிபாலன சபை இணைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கும் வகையில் செயல்படும் மணல் குவாரியை மூட வேண்டும் என மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியதின் விளைவாக அரசே மணல் குவாரியை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துவரும் 15 கிராம மக்களையும் நிர்வகிக்கும் நிர்வாகத்தினரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.