ராமநாதபுரம், மே 1–
அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சக தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ராமநாதபுரம் புறநகர் டெப்போவில் ஆப்சென்ட் போடுவது குறித்து எழுந்த புகாரின் பேரில் மேலாளர் பத்மகுமாரிடம் கேள்விக் கேட்டுள்ளார். இதில் ஆத்திர மடைந்த புறநகர் டெப்போ மேலாளர் பத்மகுமார் கிளை செயலாளர் செல்வகுமாரை தாக்கியதுடன் மிரட்டியுள்ளார். இதில் பலத்த காய மடைந்த செல்வக்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிளை செயலாளர் கேட்ட கேள்விக்கு தகுந்த பதில் கூறாமல் தாக்குதலில் ஈடுபட்ட மேலாளரின் செயலை கண்டித்து ராமநாதபுரம் புறநகர் டெப்போ தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுக் குறித்து காரைக்குடி பொது மேலாளருக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்பிஎப் நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.