மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டு விட்டது.
அதன் பின்பு 11 ஆண்டுகளாக விடுபட்டவர்களுக்கு பணியிடங்கள் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறு நியமனத் தேர்வு நடத்தப்படாமல் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று திமுக தெரிவித்து இருந்தது.
ஆனால் மறு நியமன தேர்வு அரசாணை 149 தி மு க அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் காரணமாக ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களும் மீண்டும் மறு தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுகவை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி மயிலாடுதுறை திமுக அலுவலகத்திற்குச் சென்ற தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அங்குள்ள நிர்வாகிகளிடம் மனு அளித்தனர்.
அப்போது எங்களிடம் எதற்கு மனு கொடுக்க வருகிறீர்கள் நீங்கள் துறைச்சார்ந்த அரசு நிர்வாகத்திடம் வழங்குங்கள் மேலும் தற்போது தேர்தல் நேரம் என்பதால் தேர்தலுக்கு பின்பு வாருங்கள் என திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் திமுக நிர்வாகிகள் அம்மனுவை பெற மறுத்து விட்டனர் என தேர்ச்சி ஆசிரியர்கள் தரப்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்து கையில் பதாகைகளுடன் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சிறிது நின்று விட்டு அங்கிருந்து சென்றனர்.




























