திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதனை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
திருவண்ணாமலை, ஆக.7-
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி பின் பற்றுவது குறித்தும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் அனைவரையும் வரவேற்றார். இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு கோலம் வரைந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார்.
ஆயுஸ் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு முகாமையும் அவர் பார்வையிட்டார். பின்னர், கபசுர குடிநீர் வழங்குதல், மருத்துவக் குழுவினரின் யோகா நிகழ்ச்சி விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம், திருவண்ணாமலை உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கிரண்சுருதி, தாசில்தார் பி.வெங்கடசன், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன், சுகாதார நகராட்சி ஆய்வாளர்கள் ஆல்பர்ட் வினோத் கண்ணா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜான்சன் நன்றி கூறினார்.