கும்பகோணம், ஜூன். 10 –

கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், ஆயிரக்கணக்கானோர் வீதி தோறும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக் கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில் இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது அதில் இருந்து அமுதத்துளிகள் 10 மைல் தொலைவில் உள்ள 5 இடங்களில் விழுந்துள்ளது. அவை தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், சுவாமிமலை மற்றும் கொரநாட்டு கருப்பூர் ஆகிய ஆகும். எனவே இவை பஞ்ச குரோசத்தலங்கள் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்மன், இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்களும், அகத்தியர், சுரதன் உள்ளிட் முனிவர்களும் வழிப்பட்டு தங்கள் சாப விமோசனம் பெற்றுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என போற்றப்படுகிறது. இதில் நீராடினால் பல யாகங்கள் செய்த பலன்களை உண்டு என்பது ஜதீகம்

இதற்கிடையில் இக்கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள காவிரியாற்றில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்துள்ளது. அதனை இவ்வூர் மக்கள் திறந்து பார்த்த போது அதில் படுத்த நிலையில் உக்கிரமான வடிவில் 2 கோரைபற்கள், அஷ்ட புஜங்களுடனான காளிதேவியின் மார்பளவு மரச்சிலை இருந்துள்ளது. வலது புஜத்தில் சூலம், அரிவாள், உடுக்கை, கிளி ஆகியவையும், இடது புஜத்தில் பாசம், கேடயம், மணி, கபாலமும் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அங்குள்ள சிறுமியின் அருள் வாக்கு வாயிலாக இதனை வைத்து பூஜிப்பதற்கான வழிமுறைகள் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு மறைந்த காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசிப்படி இக்காளியை சுந்தரமாகாளி என பெயற்சூட்டி தனிப்பெட்டியில் வைத்து சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில் தனி சன்னதியில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அன்று முதல் இக்காளி சுந்தரமாகாளி என்றும் பெட்டிக்காளி என்றும் பக்தியோடு போற்றப்படுகிறது

விநோதமான வழிப்பாட்டு முறைகள்

இக்காளிக்குரிய வழிப்பாட்டு முறைகள் விநோதமானது அதாவது, முகச்சவரம் செய்தவர்கள், எண்ணெய் தேய்த்து குளித்தவர்கள், கர்ப்பிணி பெண்களும் இக்காளியை வணங்கக்கூடாது அன்றாட பூஜைகள் யாவும் காளி உள்ள பெட்டியை திறக்காமலேயே நடைபெறுகிறது. இப்பெட்டியை திறக்க பெட்டிக்காளிக்கு விசேஷ சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் கொண்ட பள்ளயம் (படையல்)  இட்ட பிறகே திறக்க வேண்டும் என்பதால் விசேஷ நாட்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகுகால நேரத்தில் மட்டும் திறக்கப்படுகிறது. இங்கு காளிக்கு எலுமிச்சம் பழம் வைத்தும், குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டாலும் பக்தர்களுக்கு பிரசாதமாக மீண்டும் குங்குமமோ, எலும்பிச்சம் பழமோ, மலர்களோ வழங்கப்படுவதில்லை அதற்கு பதிலாக திருநீர் மட்டும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இக்காளி உத்தரவிட்டால் மட்டுமே ஏகதின திருவிழாவாக பல்லாக்கு திருவிழா நடத்தப்படும். அப்போது மட்டுமே இக்காளி பெட்டியில் இருந்து வெளியே விசேஷ பல்லாக்கில் வீதியுலாவாக வரும் அப்போது கோயிலில் இருந்து மாலை கிளம்பியதில் முதல், இரவு கோயிலுக்கு மீண்டும் திரும்பும் வரை இப்பல்லாக்கு ஒரு இடத்தில் கூட நிற்காமல் தொடர்ந்து அங்கும் இங்கும் முன்னும் பின்னும் ஓடிய படியே பல வீதிகளை கடந்து வரும் இத்தகைய திருவிழாவினை வேறு எங்கும் காண முடியாது.

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெறும் பல்லாக்கு திருவிழா

கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு, 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது சுந்தர மகாகாளி அளித்த உத்தரவின்படி நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட விசேஷ பல்லாக்கில் இடப்பளவு காளி சிலையினை வைத்து கருப்பூர் முக்கிய வீதிகளை வலம் வந்தது. இரவு கோயிலுக்கு திரும்பியவுடன் காளி மீண்டும் பெட்டியில் வைக்கப்படும், இக்காளிக்கு அணிவிக்கப்பட்ட பூ மாலை, எலுமிச்சை மாலைகள், எலுமிச்சை பழங்கள் ஆகியவற்றை யாருக்கும் திரும்ப வழங்குவதில்லை என்பது குறிப்பிடதக்கது. பல்லாக்கு திருவிழா காளியம்மன் உத்தரவு படி   மூன்றாண்டுக்கு அல்லது நான்கு ஆண்டிற்கு ஓர் முறை கூட இத்திருவிழா நடைபெறுவது உண்டு இப்பல்லாக்கு திருவிழாவினை காண கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து நேற்று மாலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் கருப்பூர் வீதியெங்கும் குழுமி நின்று பல்லாக்கில் பவனி வந்த சுந்தரமாகாளியினை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here