ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்பை பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வராரு… வராரு… அழகர் வடிவில் பாரு .. சப்பரம் இன்றி நடந்து வரும் நயினார் நடையைப் பாரு.. நம்ம சங்கடம் தீர்க்கப் போகும் மனதைப் பாரு.. தேங்கி நிற்கும் பிரச்சனையை ..தேடி வந்தே தீர்ப்பாரு .. மக்கள் மனதை வென்றவரு .. மக்கள் வாழ்வில் மாற்றம் தர தேர்தலில் நிற்கிறாரு.. நிச்சயம் வெல்வாரு .. தந்த உறுதிமொழிக் காப்பவரு .. என்றவாரு அனைத்துக் கட்சி தொண்டர்களும் பாடியவாரு மேள முழங்க வெடிச் சத்தம் விண்ணைப் பிளக்க இரதங்களென 500 க்கும் மேற்பட்ட கார்கள் பவனி வர .. ஊரின் எல்லையில் அமர்களமான வரவேற்பை அளித்தார் அமைச்சர் டாக்டர் .மணிகண்டன் அம்மண்ணின் மைந்தன் அதை சற்றும் எதிர்பாராத பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரமித்துப் போனார்.
ராமநாதபுரம், மார்ச் 24-
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பூர்வ ஜென்ம புண்ணியம். இதை நான் பெருமையாக கருதுகிறேன், என பாஜ வேட்பாளர் நைனார் நாகேந்திரன் மனம் உருகி கூறினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்க தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜ, தேமுதிக, பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிர கணக்கான தொண்டர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுந்து மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கமுதக்குடி, பரமக்குடி, சத்திரக்குடி என வழியெங்கும் கட்சியினருடன் மக்களும் சேர்ந்து வேட்பாளருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் நகர் எல்லையான அச்சுந்தன்வயல் கிராமத்தில் இருந்து தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அதிகரித்தது. மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு கொடுத்தை கண்டு பிரமித்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் சர்ச் அருகே வாகனத்திலிருந்து கீழே இறங்கி மக்களோடு மக்களாக நடந்தே வரத்துவங்கிவிட்டார். அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளருடன் சாலை தெரு, அரண்மனை சாலை வழியாக நடந்து வந்து அரண்மனையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் நகைக் கடை பஜார், கேணிக் கரை, வண்டிக் கார தெரு வழியாக அமைச்சர் வீடு வரை வேட்பாளர் நடந்தே வந்தார். வழியெங்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
சித்திரை மாதத்தில் தென்மாவட்ட மக்களின் சித்திரை திருவிழாவில் மக்கள் ஜாதி மத பேதமின்றி அழகரை தரிசித்து இந்தாண்டு விவசாயம் செழிக்க வேண்டும் அதற்கு மழை நன்கு பொழிய வேண்டும் என வேண்டுவது தமிழர்களின் பாரம்பரிய வழிபாடாக அமைந்துள்ளது.
அதனை பிரதிபலிக்கும் வகையில் ராமநாதபுரமே திரும்பி பார்க்கும் வகையில் மண்ணின் மைந்தரான அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பிரமாண்ட மான வரவேற்பு அளித்தது வேட்பாளருக்கு இது வரவேற்பு கூட்டமா அல்லது வெற்றி கூட்டமா என பிரமித்து விட்டார்.
அந்த பிரமிப்புடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கும் பாஜ தேசிய தலைவர் அமிர்த்ஷாவிற்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமநாதபுரம் தொகுதியின் அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன். குறிப்பாக சாலைகள், குடிநீர் போன்ற வசதிகள் தற்போது சிறப்பாக இருந்தாலும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இத் தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான பயணிகள் விமான நிலையம் மற்றும் ராமநாதபுரத்திற்கு மருத்துவ கல்லுாரி கொண்டு வர முழு முயற்சி எடுப்பேன். இதுவரை எந்த பிரமரும் செய்யாத அளவில் நமது பாரத பிரதமர் மோடி 1900 மீனவர்களை விடுதலை செய்வதற்கு உறுதுணையாக இருந்தார். மீனவர் பிரச்னை வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் வேறு தொகுதியை சேர்ந்தவர் என கூறகின்றனர். எம்ஜிஆர், கருணாநிதி போன்ற பல பெரிய தலைவர்கள் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்று மக்கள் சேவை செய்துள்ளனர். சேவை செய்வதற்கு தகுதி உள்ளவரா என்பதைதான் பார்க்க வேண்டும். மேலும் எனக்கு பூர்விகம் ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பநாடுதான். எனக்கு பூர்விக மண்ணில் போட்டியிட கிடைத்த வாய்ப்பு பூர்வீக புண்ணியம்தான். எனவே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களது கூட்டணி இயற்கையான கூட்டணி. நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். மோடி மீண்டும் பிரதமராக அமர்ந்து மக்கள் பணியாற்றுவார்.
இவ்வாறு வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக., மாவட்ட தலைவர் முரளிதரன், பாஜக ., மாநில துணைத் தலைவர் குப்புராம், தேமுதிக., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் ஆனி முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வெளியே வந்த போது துாரத்தில் அழகர் வராரு… சங்கடம் தீர்க்க போராரு… என்ற பாடல்கள் நம் காதில் கேட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதி மக்கள் சங்கடம் தீர்க்க வந்த அழகரோ நயினார் நாகேந்திரன் என மக்கள் பேசிக் கொண்டனர்.
களம் இறங்கிவிட்டார் மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்
வரவேற்பு நிகழ்ச்சியையே பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை அமோக வெற்றி பெற செய்வதற்கு முழு மூச்சில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் வியூகம் அமைத்து திட்டங்களை தயாரித்து பட்டிதொட்டிக்கெல்லாம் வேட்பாளரை அழைத்து சென்று மக்களை சந்திக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் ஆதரவு திரட்டுவது, மக்களின் குறைகளை கேட்பது என வியூகம் அமைத்து தற்போது விறுவிறுப்பாக களத்தில் இறங்கி உள்ளார். கட்சி கிளை செயலாளர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக பார்க்க தினமும் ஆலோசனைகளை வழங்கியவண்ணம் உள்ளார்.