மயிலாடுதுறை, ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக் குரவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரிய தலமாகும்.

மேலும் திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று இங்கும் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது.

அதுப்போன்று இவ்வாண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக, ஐயாரப்பர் பஞ்சமூர்த்திகளுடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழன்பேட்டை அழகியநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், மயிலாடுதுறை மாயூரநாதர், திருஇந்தளுர் தான்தோன்றீஸ்வரர் ஆகிய 7 ஆலயங்களின் சுவாமிகளுடன் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் எழுந்தருளி, சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது.

அங்கு அனைத்து சுவாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here