கும்பகோணம், ஜூன். 10 –

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் ஒருபகுதியாக இன்று நண்பகல் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரம் என பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது  மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் இத்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் நேற்றிரவு நிச்சயதார்தமும், இன்று நண்பகல் சிறப்பு மலர் அலங்காரத்தில் மங்களாம்பிகையும், ஆதிகும்பேஸ்வரசுவாமியும் விசேஷ மேடைக்கு எழுந்தருள, சீர்வரிசை கொண்டு வருதலும், மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பால் பழம் அளித்தல், நலுங்கு ஆகியவையும், ஹோமம் வளர்த்து நடைபெற்றது.

தொடர்ந்து,  சிவாச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேளதாளம் முழங்க, ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு அமர்ந்து தரிசிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணத்துடன் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் கோபுர ஆர்த்தியும் செய்யப்பட்டது.

இன்றிரவு திருமண மறை சடங்குகளும், நலுங்கு ஊஞ்சல் மற்றும் பிரகார உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை 11ம் தேதி சனிக்கிழமை 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 13ம் தேதி திங்கட்கிழமை இரவும் இதே போன்று சுவாமி பெரிய பிரகார உலா நடைபெறுகிறது, பின்னர் வைகாசி விசாகத்தை யொட்டி, 14ம் தேதி செவ்வாய்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் காவிரியின் பகவத் படித்துறையில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிறகு 15ம் தேதி புதன்கிழமை சுத்தாபிஷேகத்துடன் இவ்வாண்டிற்காண வைகாசி விசாக திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here