கும்பகோணம், மே. 25 –
கும்பகோணம் மாநகர், செக்காங்கண்ணி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன், ஸ்ரீ சுபிக்ஷ விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று காளி திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த காளியம்மனுக்கு படையலிட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனர்.
கும்பகோணத்தில் செக்காங்கண்ணி தெருவில் உள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஸ்ரீ சுபிக்ஷ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது,
மேலும் இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்வாலயத்தில் வைகாசி திருவிழா நடைப்பெற்றது.
அதனை முன்னிட்டு கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கடந்த 21ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், காவடி, அலகு காவடி, எடுத்து முக்கிய விதிவிலக்காக ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் உள்ளிட்ட கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ருத்ர காளியம்மன் திருநடனம் வீதி உலா நடைபெற்றது. இதனை யொட்டி, ருத்ர காளியம்மன், திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலும்பிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் பூண்டியாயிக்கு தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர் அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, ருத்ர காளியம்மன் தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கியது.



















