சென்னை, செப் . 19 –

தமிழக திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 754 திருக்கோயில்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதில் பழனி அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் கடந்த செப் – 16 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து தொடங்கி வைத்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணம் கருதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலங்களில் வழங்கப்பட்டு வந்ததது. இனி நாளை முதல் அதில் சில மாற்றங்களை திருத்தி அமைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் அதில் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களிலும், அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என அதில் அறிவிக்கப் பட்டுள்ளது.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here