கும்பகோணம், நவ. 28 –
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவருக்கு மனைவி லட்சுமி (73). மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளதாகவும், மேலும் மகளும் திருமணத்திற்கு பின்பு இறந்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மற்றொரு மகனான ராஜேந்திரன் என்பவர் (55) மட்டுமே உள்ள நிலையில் அவருடன் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் தில்லையம்பூரில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே ராஜேந்திரன் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் ஆனால் அவரின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முன் வராததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தாய் தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாய் தந்தையை அரிவாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழதந்த நிலையில், அவர்களின் பிரேதத்துடன் இரண்டு நாட்கள் வீட்டின் உள்ளேயே அவர்கள் இருவரின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு, வழக்கம் போல் எவ்வித சம்பவங்களை நடைப்பெறாதது போல் சர்வ சாதாரணமாக தினசரி பணிகளை செய்து வந்துள்ளார்.
மேலும் கொலை நடந்த இந்த இரண்டு நாட்களும் காலை எழுந்து அருகில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தஞ்சையில் இருந்து மோப்ப நாய் சோழன் மற்றும் தடவ அறிவியல் உதவி ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள். மேலும், உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















