சிவகங்கை, ஜூன். 08 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப் பட்டியில் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டிலான தந்தை பெரியார் நினைவு சமத்துவப் புரத்தில் கட்டப்பட்டுள்ள 100 எண்ணிக்கையிலான வீடுகளையும் , தொடர்ந்து சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் அவர்களின் திருவுருச் சிலையினையும் திறந்து வைத்தார்.

இச்சமத்துவப் புரத்தில் சாதிபேதமின்றி அனைத்து சமுதாய இன மக்களும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தைப் பெரியாரின் பெயரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உன்னதத்திட்டம் இத்திட்டமாகும்.

முன்னதாக கலைஞர் அவர்களால் சிவகங்கை மாவட்டத்தில் 9 சமத்துவப்புரங்கள் கட்டப்பட்டு அதில் எட்டு சமத்துவப் புரங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இன்று திறந்து வைக்கப்படும் 9 வது சமத்துவபுரம் கடந்த 2010 – 2011 ஆம் நிதியாண்டில் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் இச்சமத்துவப்புரம் வீடுகள் கட்டப்பட்டு அது திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக அது திறக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், இச்சமத்துவபுரம் 12.253 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மேலும் இதில் அமைந்துள்ள 100 எண்ணிக்கையிலான வீடுகள் தலா ரூ. 1.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சமத்துபுரம் முகப்பு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் தந்தைப்பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதலமைச்சர் திறந்து வைத்த அச்சமத்துவபுரத்தை பார்வையிட்ட அவர் பயனாளிகளின் வீடுகளுக்கான சாவிகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.

மேலும் இச்சமத்துவப்புரத்தில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்புக்காக ரூ. 15.87 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப்பணிகள் ரூ.2.92 இலட்சம் மதிப்பூட்டிலும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

அண்ணா விளையாட்டுத்திடல் ரூ.1.01 இலட்சம் மதிப்பீட்டில் கைப்பந்து, கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சிறுவர் சிறுமியர் விளையாடும் வகையில் கலைஞர் சிறுவர் பூங்கா ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மெருக்களுக்கு ரூ.4.80 இலட்டசம் மதிப்பீட்டில் தெரு விளக்குகள், ரூ.96.39 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.54.29 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரு.4.38 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய வலைக் கடைகள், ரூ.8.09 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்ட்டுள்ள அங்கன்வாடி மற்றும் நூலக கட்ட டத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வின் போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மதிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் பெ.அமுதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here