ஆவடி, செப் . 20 –
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியை மாவட்டம் நிர்வாகம் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர் வரும் பணியை தமிழக அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு வசந்தம் நகர் 17 வது வார்டு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர் மாபெரும் மழை நீர் கால்வாய் தூய்மைப் பணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மரு.ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பெரிய கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும் குறுகிய மழை நீர் வடிகால்வாய்களை அகலப்படுத்தவும், ஆக்கிரப்பு செய்துள்ள வடிகால் மற்றும் தேக்கங்களின் நிலங்களை மீட்டெடுக்கும் பணியும் அதன் சார்பு பணியாக நடந்து வருகிறது.
மேலும் இது குறித்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது, ஆவடி மாநகராட்சிக்குட்ப்பட்ட நீளமாக உள்ள சிறிய கால்வாய் மற்றும் 15 கிமீ நீளம் உள்ள பெரிய கால்வாய் தூர் வாரும் பணியை தற்போது தொடங்கியுள்ளதாகவும், இப்பணிகளை ஒரு வார காலத்தில் முடித்திடவும் திட்டமிட்டுள்ளது எனவும். இப்பணி முடிந்த பின் மழைக் காலங்களில் மழை நீர் எவ்வித தடைகளும் இன்றி செல்லும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமின்றி அகற்றி அரசு கையகப்படுத்தும் எனவும் அதற்கான ஆய்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகராட்சி பொறியாளர் வைத்தியலிங்கம், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பொதுப்பணித்திலம், மாநராட்சி சுகாதார அலுவலர் ஜாபர், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன், உதவி பொறியளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.