பொன்னேரி, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தசரத நகர் பூங்காவில் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்திற்காக மணமகன் ஸ்ரீனிவாசப்பெருமாளை சீர்வரிசைகளுடன் பொன்னியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து உய்யாளி சேவையும், மாலை மாற்றும் சடங்கும், பூப்பந்து எறிதல் சடங்கும் நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்க்கப்பட்டு மணமக்களுக்கு காப்பு கட்டி, பட்டாடை அணிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கெட்டிமேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீதேவி பூதேவியர்க்கு மங்கல நாண் சூட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டு எம்பெருமானை எழுச்சியுடன் வணங்கினர்.
திருக்கல்யாண வைபோகத்தை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் தீப தூப ஆராதனைகள் காண்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மங்கலநாண் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.
அச்சிறப்பு மிகு விழாவில் பங்கேற்க பொன்னேரி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைத் தந்து ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண் குளிர கண்டு உளம் பூரித்தனர்.



















